அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணியை கோரும் பாகிஸ்தான்
போர் மத்தியஸ்தம் செய்வதற்கு பிரதியீடாக பாகிஸ்தான் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி நிலைப்படுத்தல் வசதியை அமெரிக்காவிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள தெற்காசியப் பொருளாதாரத்திற்கு இது உயர் நாடியாக இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்டிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இஸ்லாமாபாத், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே 10 பில்லியன் டொலர் மதிப்பிலான, ஐந்து ஆண்டுகள் வரையிலான முதிர்வுக் காலத்துடன் கூடிய இருதரப்பு அந்நியச் செலாவணி நிலைப்படுத்தல் ஆதரவு வசதியைக் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வசதிக்கு ஒப்புக்கொள்ளப்பட்டால், அது பாகிஸ்தானின் கையிருப்பை வலுப்படுத்தும், ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும், மற்றும் பலதரப்பு நிதியுதவியை அது சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
அதே நேரத்தில், இஸ்லாமாபாத் தனது சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு இணங்க கடுமையான நிதி மற்றும் பணவியல் கொள்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




