18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு
2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பங்குச் சந்தை குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வளர்ப்பதும், எதிர்காலத்தில் அவர்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்குத் தேவையான நிதி அறிவை அவர்களுக்கு வழங்குவதுமே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட, 13-ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பதாரர்கள், கொழும்பு பங்குச் சந்தையினால் அறிமுகப்படுத்தப்படும் பாடநெறியைப் பூர்த்தி செய்து, அதன் பின்னர் நடத்தப்படும் பரீட்சையில் தேர்ச்சியடைய வேண்டும்.
அவ்வாறு தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





