காஷ்மீருக்குள் வெளிநாட்டு தீவிரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது 65 வெளிநாட்டு தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் இந்திய மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அண்மையில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பல தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் 65 வெளிநாட்டு தீவிரவாதிகளில் 55 பேர் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது. ஏனைய 10 பேரும் பெரிய தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படும் சிறிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில், ஜம்மு – காஷ்மீரின் தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களைப் பாதுகாப்புப் படையினர் அமைத்துள்ளனர். இவற்றில் பல முகாம்கள் கடல் மட்டத்திலிருந்து 10,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், தீவிரவாதிகள் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளை மறைவிடங்களாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் இந்த முகாம்களில் இராணுவத்தினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் ஜம்மு – காஷ்மீர் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




