அரபு உலகில் நேட்டோ தரத்திலான பாதுகாப்பு ஒப்பந்தம் – மேலும் சில நாடுகள் இணைய வாய்ப்பு
சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகள் விரைவில் இந்த ஒப்பந்தத்தில் இணையக்கூடும் என்று அங்காரா சூசகமாகத் தெரிவித்துள்ளது.
துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் (Hakan Fidan) பெயர் குறிப்பிடாத பிற நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் சேர ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியா, அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தையும், வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையையும் கொண்ட துருக்கி ஆகிய நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், அவை மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்று இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே சவூதி அரேபியாவில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்த ஒப்பந்தத்தின் பரஸ்பர பாதுகாப்பு குறித்த பிரிவு, நேட்டோவின் 5வது பிரிவைப் போன்றது என்று துருக்கிய அமைச்சர் விவரித்தார். அந்தப் பிரிவின்படி, 32 உறுப்பு நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஈரானையோ அல்லது வேறு எந்த நாட்டையோ இலக்காகக் கொண்டதல்ல என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.




