மியான்மர் இராணுவ ஆட்சியாளர் தாய்லாந்து விஜயம்
மியான்மரின் இராணுவப் ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லேங்க் (Min Aung Hlaing) தாய்லாந்திற்குவிஜயம் மேற்கொண்டுள்ளார்.
2021-ஆம் ஆண்டில் ஆங் சாங் சூச்சியின் (Aung San Suu Kyi) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அவர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டில் உள்நாட்டுப் போரை மூட்டியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் சீரழிந்தது.
2017-ஆம் ஆண்டில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டதில் தொடர்புடையவர் என்பதால் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியிருந்த மின் ஆங் ஹ்லேங்க், மேற்கத்திய நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு சர்வதேச சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒருவராக இருந்தார்.
சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடைபெறவில்லை என பரவலாகக் கண்டிக்கப்பட்ட தேர்தலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் அதிபராக அறிவிக்கப்பட்டதுடன், தனது இராணுவத் தளபதி பதவியிலிருந்தும் விலகினார்.
முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதாலும், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறாததாலும், இராணுவத்தின் சொந்தக் கட்சியே புதிய பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துவது உறுதி செய்யப்பட்டது.
2021-இல் அவரும் ஏனைய ஆசியான் (ASEAN) உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்ட 5 அம்ச ஒத்த கருத்தை அமல்படுத்த மறுத்ததால், தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்க மின் ஆங் ஹ்லேங்கிற்குத் தடை விதிக்கப்பட்டது.
வன்முறையைக் குறைத்து, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு அந்த ஒப்பந்தம் மியான்மர் இராணுவத்தைக் கோரியது.
மியான்மரில் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடியைத் தணித்து, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், முழுமையான தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கும் மியான்மர் இராணுவம் மேலும் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்று இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சில ஆசியான் நாடுகள் விரும்புகின்றன.




