கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் மழை நீடித்ததால், பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கருத்திற் கொண்டு 10 மாவட்டங்களில் நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
கேரளாவில் கனமழை தொடரும் என்றும், கடலோர மாவட்டங்களில் தரைக் காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாகக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதுடன், ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்குப் பெரிய அலைகள் எழக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பகல் நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆற்றைக் கடப்பதையோ அல்லது வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடுவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மீட்புப் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




