சியூட்டாவை ஊடுருவிய குடியேறிகள் – உளவுத்துறையினரின் எச்சரிக்கைகள் புறக்கணிப்பு
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள் குடியேறிகள் ஊடுருவ உள்ள விடயம் தொடர்பில் உளவுத்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் உளவுத்துறை மொராக்கோவின் உளவுத்துறையினருக்கும் மாட்ரிட் நகரில் உள்ள அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே எச்சரித்திருந்ததாக அரச ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆவணங்களின்படி, மொராக்கோவின் வருடாந்திர ‘அரியணை ஏறிய நாள்’ (Throne Day) கொண்டாட்டங்களைப் பயன்படுத்தி, எல்லை வேலியின் மீது ஏறியோ அல்லது அதைச் சுற்றி நீந்தியோ சியூட்டாவுக்குள் நுழைய குடியேறிகள் சமூக ஊடகங்கள் வாயிலாகத் திட்டமிட்டிருப்பது குறித்து, ஸ்பெயினின் உளவு அமைப்பான ‘தேசிய உளவுத்துறை மையம்’ (CNI), மொராக்கோவின் உளவு அமைப்புகளான DGST மற்றும் DGED-க்கு ஜூலை 29 அன்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதே நாளில், சியூட்டாவில் உள்ள ஸ்பெயின் அரசின் பிரதிநிதிக்கும் இந்தத் திட்டங்கள் குறித்து CNI எச்சரிக்கை விடுத்திருந்ததாக, பொதுவெளியில் வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள் தெரிவிக்கின்றன.
சியூடாவில் சுமார் 70000 குடியேறிகள் அத்துமீறி ஊடுருவிய நிலையில், 140 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.
அதேநேரம் இந்த சம்பவம் இடம்பெற்று ஆறு வாரங்கள் கடந்தும் 10,000-க்கும் மேற்பட்ட குடியேறிகள் துணையின்றி சியூட்டாவிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களிலோ அல்லது அப்பகுதியின் தெருக்கள் மற்றும் கடற்கரைகளிலோ வசித்து வருகின்றனர்.
இந்தச் சூழல், நெருக்கடியை ஸ்பெயின் அரசு கையாண்ட விதம் குறித்து அதிருப்தியடைந்த உள்ளூர் மக்கள் கிட்டத்தட்ட தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




