கட்டார் பரிசளித்த விமானத்தில் பாதுகாப்பு குறைப்பாடுகள் உள்ளதா? திடீரென திறந்த சரிவு பாதையால் சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதிக்கு கட்டார் அன்பளிப்பாக வழங்கிய விமானத்தில் சில பாதுகாப்பு குறைப்பாடுகள் இருப்பதாக அல்லது மேம்படுத்தல்கள் தேவைப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ட்ரம்ப் நேற்று அந்த விமானத்தை பயன்படுத்தி டல்லாஸ் நகருக்கு புறப்பட தயாரானார். அப்போது அவசரகால சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் சரிவு பாதை (emergency slide) திடீரென திறந்துக்கொண்டது.
இதன்காரணமாக அந்த பாதை அகற்றப்பட்டதுடன், ட்ரம்பின் பயணமும் தாமதமானது.
இராணுவப் பணியாளர்கள் தவறுதலாக அந்தச் சரிவுப் பாதையைச் செயல்படுத்திவிட்டதாக, இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்நிலையில் விமானம் பாதுகாப்பானதுதானா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ”ஆம், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இல்லையென்றால் நான் இதில் ஏறியிருக்கமாட்டேன்” என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
குறிப்பிடப்படாத சில பாதுகாப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக, இந்த 747 ரக விமானம் அக்டோபர் மாதம் பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக விலக்கப்படவுள்ளதாகவும், அப்பணிகள் சுமார் 60 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




