சிறை தண்டனையை இடைநிறுத்தகோரி மலேசியாவின் முன்னாள் பிரதமர் மேன்முறையீடு
ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மற்றொரு வழக்கிற்கான தண்டனையில் அவருக்கு அரச மன்னிப்பு வழக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்காள்ளப்பட்டுள்ளது.
73 வயதான நஜீப், தாம் பிரதமராக இருந்தபோது தொடங்கிய ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ (1MDB) என்ற அரசு நிதியத்திலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைக் கையாடல் செய்தமை மற்றும் பணமோசடி வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 2022 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் கடந்த வாரம் நஜீப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கினார்.
அதன்படி, 50 மில்லியன் ரிங்கிட் (12.27 மில்லியன் டாலர்) அபராதத்தைச் செலுத்தினால், ஆகஸ்ட் 2028-இல் அவரது விடுதலைக் காலம் வரை, மீதமுள்ள தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ‘1MDB’ ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நஜீப்பிற்கு மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைக் காலம், அவரது வீட்டுக் காவல் முடிந்த பிறகே தொடங்கும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் வரை தண்டனையை இடைநிறுத்தக் கோரும் நஜீப்பின் கோரிக்கை குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று தீர்ப்பளிக்கும் என அவரது வழக்கறிஞர் முகமது ஷபி அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நஜீப் அபராதத் தொகையைச் செலுத்தி, நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையும் கிடைத்தால், “அவர் அன்றைய தினமே விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது” என்று முகமது ஷபி கூறினார்.
இருப்பினும், அரச மன்னிப்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்னும் கிடைக்காததால், வீட்டுக் காவல் உத்தரவின் முழுமையான விதிமுறைகள் குறித்து இன்னும் தெளிவு பெறவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.




