காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி
ஜனநாயகக் காங்கோ குடியரசின் (DRC) டாங்கனிகா ஏரியில் (Lake Tanganyika) பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
படகில் பயணித்த மற்ற பயணிகளைக் கண்டறியும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காங்கோவின் டாங்கனிகா மாகாணப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி, அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
காங்கோவின் மாபேரா (Mapera) கிராமத்திற்கு அருகே சுமார் 100 பயணிகளுடனும் சரக்குகளுடனும் சென்றபோது இந்தப் படகு கவிழ்ந்துள்ளது.
டான்சானியாவில் உள்ள ‘கிகோமா’ (Kigoma) துறைமுகத்தில் இருந்து காங்கோவில் உள்ள ‘கலேமி’ (Kalemie) நகரத்தை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
படகு கவிழ்ந்ததற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், காங்கோவில் சமீபத்திய ஆண்டுகளில் படகு விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்குச் செல்லும் படகுகளில் பெரும்பாலும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதும், போதிய பாதுகாப்பு உடைகள் (Life jackets) இல்லாததுமே இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகக் கூறப்படுகிறது.
10 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட காங்கோ, உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். அங்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெரும்பாலான மக்களுக்குப் படகுப் பயணமே மிகவும் மலிவான மற்றும் வசதியான போக்குவரத்து வழியாக உள்ளது.




