உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு – கருத்து கணிப்பில் தகவல்
எதிர்வரும்வரும் வியாழக்கிழமை பிரித்தானியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் தலைமையிலான கட்சி, தற்போது வைத்திருக்கும் சுமார் 2,500 உள்ளாட்சி மன்ற இடங்களில் 2,000 வரை இழக்கும் அபாயம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் சுமார் 5,000 கவுன்சிலர் பதவிகளுக்கு 25,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனால், வாக்காளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிலான தெரிவு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இரண்டு முக்கிய கட்சிகளுக்கான ஆதரவு குறைந்து வரும் நிலையில், வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரிந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளதால் சில இடங்களில் மிகவும் குறைந்த வாக்குவீதத்திலேயே வெற்றி பெறும் நிலை ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சில பகுதிகளில் வெறும் 15 வீத வாக்குகளுடன் சில வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இதுபோன்ற நிலை, தற்போதைய தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அதிகமான கட்சிகள் போட்டியிடுவது ஜனநாயகத்திற்கு நல்லது என்றும், மக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்த உதவும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





