திருகோணமலையில் சோகம் – யானை தாக்கியதில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி
திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி இன்று (02) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சேருநுவர-சோமபுர பகுதியிலுள்ள வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த 30 ஆம் திகதி யானை மின் வேலி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தபோது யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்தார்.
இதனை அடுத்து இவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்திர சிகிச்சைக்கு உட்படுத்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சேருநுவர- சோமபுர LB-01 பகுதியில் வசித்து வரும் எம். எம். டில்சான் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறயில் வைக்கப்பட்டுள்ளதுடன்
உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.






