பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி
இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து
எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்திலிருந்து அதே இலக்கை நோக்கிய மற்றொரு விமானத்திற்கு மாற்றப்படலாம்.
ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
பயணிகளை விமான நிறுவனம் விரும்பும் நேரத்தில், வேறு விமானத்திற்கு மாற்றும் நிலை உருவாகலாம் என கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பயண அட்டவணைகளை முன்கூட்டியே உறுதி செய்து, கோடைக்கால சிரமங்களை தவிர்க்க இந்த திட்டம் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.





