உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தமது மண்ணிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: லெபனான் ஜனாதிபதி வலியுறுத்து

லெபனானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி ஜோசப் அவுன், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதுடன், லெபனானின் உள்விவகாரங்களில் ஈரான் தலையிடுவதையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

லெபனானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி ஜோசப் அவுன், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதுடன், லெபனானின் உள்விவகாரங்களில் ஈரான் தலையிடுவதையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

லெபனானின் 83ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை உரையாற்றிய அவர், நாட்டின் இறையாண்மைக்கு இரண்டு முக்கிய தடைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவை லெபனான் பிரதேசத்தின் சில பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் ஈரான் ஆட்சியின் செல்வாக்கு மிக்க சில தரப்பினரால் ஆயுதங்கள் மற்றும் அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட முடிவுகள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுத் தலையீடு என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இரண்டு தடைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், அவை காரணமாக லெபனான் தனது சுதந்திரத்தை முழுமையாகக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“லெபனான் பிரதேசத்தின் ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் வெளியேறுங்கள். உங்கள் தாக்குதல்களை நிறுத்துங்கள். எங்கள் கைதிகளைத் திருப்பி ஒப்படையுங்கள்” என இஸ்ரேலுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் பொதுமக்கள் மற்றும் தெற்கு லெபனானில் இடம்பெற்ற மோதல்களின் போது கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உள்ளிட்ட பல டஜன் லெபனான் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அதேவேளை, அனைத்து ஆயுதங்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், வெளிநாட்டு சக்திகளின் கட்டளைகளுக்கு இணங்கும் அல்லது அவற்றின் நலன்களுக்காகச் செயல்படும் ஆயுதங்கள் அரசுக்கு வெளியே இருக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி ஜோசப் அவுன் உறுதியளித்தார்.

“ஆயுதங்களை ஒப்படையுங்கள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க லெபனான் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அந்த அமைப்பின் ஆயுதக் களஞ்சியம் நீண்டகாலமாக லெபனான் இராணுவத்தின் ஆயுத பலத்தை விட அதிகமாக இருந்து வருகின்றது. இஸ்ரேலை எதிர்ப்பதற்காகவே தமது ஆயுதங்கள் அவசியம் என ஹிஸ்புல்லா நியாயப்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குதல், தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் படிப்படியாக வெளியேறுதல் மற்றும் அப்பகுதியில் லெபனான் இராணுவத்தை நிலைநிறுத்துதல் ஆகியவை அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

2023 ஒக்டோபரில் காசா மீதான இஸ்ரேலின் போர் ஆரம்பித்ததிலிருந்து லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8,953 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30,643 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி