லடாக்கிலுள்ள 28 இடங்களின் பெயர்களைத் தரப்படுத்தியது இந்தியா
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள 28 முக்கிய இடங்களின் பெயர்களை முறைப்படுத்தி, அதிகாரப்பூர்வமாகத் தரப்படுத்தி (Standardised) இந்திய அரசு அறிவித்துள்ளது.
நிலவியல் அளவைத்துறை மற்றும் அரசுப் பதிவேடுகளில் இருந்த பெயர்களில் காணப்பட்ட மாறுபாடுகளைக் களைந்து, சீரான மற்றும் தெளிவான உச்சரிப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் கலாச்சார மற்றும் உள்ளூர் அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில், Survey of India மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் ஆலோசனைகளுடன் இந்தத் திருத்தப்பட்ட பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் நிர்வாகத் தெளிவை மேம்படுத்தவும், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் துல்லியத் தன்மையைப் பேணவும் இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சிகரங்கள் அதிஷா கிரி, கனிஷ்க சிகரம், மார்த்தாண்ட கிரி, சோரவர் சிகரம், ரிஞ்சன் சாங்போ, சாக்யஸ்ரீ கிரி, மார்பா லோட்சவ ரி, மிலரேபா காங்க்ரி, சிவாரி மற்றும் மகேஷ்வர்ரி என பெயரிடப்பட்டுள்ளன.
கருண் பீர், டிராக் கார்போ மற்றும் ஜோல்மோரி ஆகியவை மலைத்தொடர்களாகவும், சாப்சிங்கல் கணவாய் மற்றும் ஷாக்மிர்க் கணவாய் மற்றும் ஷாக்மிர்க் கணவாய் ஆகியவை கணவாய்களாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு கல்வான் மோதலைத் தொடர்ந்து இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே பதற்றம் அதிகமாக இருந்த கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் பகுதிகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்.




