T20 தனியார் லீக் போட்டிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்; ஐசிசி அதிரடி திட்டம்
உலகளாவிய T20 தனியார் கிரிக்கெட் லீக் போட்டிகள் மீதான தனது அதிகாரத்தையும் கண்காணிப்பையும் விரிவுபடுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) திட்டமிட்டுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட மறுஆய்வுக் குழு பல புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளதுடன், அவை இந்த வார இறுதியில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளன.
இதன்படி, தனியார் லீக் அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், பந்தய நிறுவனங்களின் அனுசரணையைத் தடை செய்தல், ஊழல் தடுப்பு அமைப்புகளின் கண்காணிப்பைக் கட்டாயமாக்குதல் மற்றும் லீக்குகளுக்கு அனுமதி வழங்குவதற்குக் கட்டணம் அறவிடுதல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், முழு உறுப்பினர் அந்தஸ்துள்ள கிரிக்கெட் சபைகள் வழங்கும் தனியார் லீக் அனுமதிகளை மறுஆய்வு செய்வதற்கும், தேவையேற்பட்டால் அவற்றை இரத்துச் செய்வதற்கும் ஐசிசிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஐ.எல்.டி20 மற்றும் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்.
குறிப்பாக, அணியொன்றில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டால், வெளிநாட்டு வீரர்களை அதிகம் நம்பியுள்ள இந்தத் தொடர்களின் வணிக ரீதியான நிலைத்தன்மை கேள்விக்குறியாகலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனியார் லீக் போட்டிகளில் அதிகரித்து வரும் ஊழல் அபாயங்கள், வீரர்களுக்கான சம்பளப் பிரச்சினைகள் மற்றும் உரிமையாளர் மாற்றங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதும் இந்தப் புதிய நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
குறித்த பரிந்துரைகள் தொடர்பில் ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் குழு கலந்துரையாடி, தேவையானவற்றை நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்கவுள்ளது.




