கிரீஸ் பிணைமுறி விவகாரம் – மேன்முறையீட்டு மனுவை திரும்ப பெற்றார் அஜித் நிவாட் கப்ரால்
கிரீஸ் பிணைமுறி விவகாரத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை அவர் நேற்றைய தினம் (9.10) மீளப் பெற்றுள்ளார்.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி திலான் ரத்நாயக்க விடயங்களை முன்வைக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 201(1) பிரிவின் கீழ் இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேன்முறையீட்டு மனுவை மீள பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
அதற்கு நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியது.
கிரீஸ் பிணைமுறி விவகாரத்தில் 1.8 பில்லியன் ரூபாவை முதலீடு செய்து அரசாங்கத்துக்கு நட்டம் விளைவித்ததாகக் கூறி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரபாலுக்கு எதிராகக் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன், அதன்பின்னர் குற்றப்பத்திரிகை மீளப்பெறப்பட்டு மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




