பணப் பரிவர்த்தனை தளங்களில் மோசடி: இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
இந்திய அரசுடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனை தளங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை இலக்காகக் கொண்டு பண மோசடிகள் இடம்பெறுவதாக இந்திய இணையப் பாதுகாப்பு அமைப்பான CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் தாண்டி, அரசுடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகக் கூட்டாளர்களுக்குப் பணம் வழங்கும் தளங்களிலும் மோசடிகள் இடம்பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முக்கிய எச்சரிக்கையில், பணம் செலுத்துவதற்கான வணிகப் பதிவுகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்து, முறையான பணப் பரிவர்த்தனை வழிமுறைகளைப் பயன்படுத்தி மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக CERT-In சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, பயனாளிகளின் வங்கி விவரங்கள், பணம் செலுத்தும் அறிவுறுத்தல்கள் மற்றும் பணப் பரிமாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரிகள் தொடர்பான மாற்றங்களை சுயாதீனமாகச் சரிபார்க்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேவை வழங்குநர்கள் தங்களது வாடிக்கையாளர்களின் கணினி அமைப்புகளைத் தனித்தனியாகப் பராமரிப்பதுடன், நிர்வாக அணுகல் அதிகாரங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, வணிக நிறுவனங்கள், அரச அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இணையத் தாக்குதல்கள் இடம்பெறுவதையும் CERT-In கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக நிறுவனங்கள் தங்களது இணையப் பாதுகாப்பு கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது




