சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் வெளிநாட்டவர்: வரலாறு படைக்கத் தயாராகும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரராக முஹம்மது ஸீஷான் அலி, சீனாவின் விண்வெளி நிலையத்துக்குச் செல்லத் தயாராகியுள்ளார்.
சீனாவின் ஷென்சோ-24 (Shenzhou-24) விண்வெளிப் பயணத்தின் மூலம் அவர் நாளை (25) விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.
இதன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும், சீனாவின் தியாங்கொங் (Tiangong) விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெறவுள்ளார்.
40 வயதான முஹம்மது ஸீஷான் அலி, பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் விமானி ஆவார். அவர் விண்வெளிப் பயணத்தில் விஞ்ஞானப் பரிசோதனைகளுக்குப் பொறுப்பான நிபுணராக (Payload Specialist) பங்கேற்கவுள்ளார்.
இந்த விண்வெளிப் பயணம் சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியூகுவான் (Jiuquan) செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து நாளை காலை 8.18 மணிக்கு (சீன நேரம்) முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் பயணத்தில் சீன விண்வெளி வீரர்களான டாங் ஹொங்போ (Tang Hongbo) மற்றும் வூ யி (Wu Yi) ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
ஸீஷான் அலி தியாங்கொங் விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்து சீன விண்வெளி வீரர்களுடன் இணைந்து பல்வேறு விஞ்ஞானப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளார்.
அதன்பின்னர், ஷென்சோ-23 விண்கலம் மூலம் அவர் மீண்டும் பூமிக்குத் திரும்பவுள்ளார்.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானிய விண்வெளி வீரர்களுக்குச் சீனாவில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




