ஹமாஸ் தலைவரின் குடும்பத்தைக் குறிவைத்து தாக்குதல்: உயிர் தப்பிய கடைசி மகன்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் வான்வழித் தாக்குதல் முயற்சியில் அவர் உயிர் தப்பியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கலீல் அல்-ஹய்யாவின் மகனான இஸெல்டீன் அல்-ஹய்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இலக்கு வைக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி பாசெம் நைம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் கலீல் அல்-ஹய்யாவின் மருமகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலீல் அல்-ஹய்யாவின் உயிருடன் எஞ்சியிருந்த கடைசி மகனே இஸெல்டீன் என பாசெம் நைம் குறிப்பிட்டுள்ளார். அவரது ஏனைய நான்கு மகன்களும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு கத்தாரில் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதலில் கலீல் அல்-ஹய்யா உயிர் தப்பியிருந்ததுடன், அவரது மகன் ஹுமாம் அல்-ஹய்யா உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது




