ஆஸ்திரேலியாவை உலுக்கிய காளான் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
ஆஸ்திரேலியாவில் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கி மூவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எரின் பட்டர்சன், தனது தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு, தனது பிரிந்த கணவரின் குடும்பத்தினருக்கு வழங்கிய உணவில் விஷக் காளான்களைக் கலந்து மூவரைக் கொலை செய்ததாக எரின் பட்டர்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் அவரது மாமனார் டொனால்ட் பட்டர்சன், மாமியார் கேல் பட்டர்சன் மற்றும் கேலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் உயிரிழந்தனர். ஹீதரின் கணவர் இயன் வில்கின்சனை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு நீதிமன்றம் அவரைக் குற்றவாளியாக அறிவித்திருந்ததுடன், ஆரம்பத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிணை வழங்கப்படாத ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
எனினும், கடந்த மாதம் விக்டோரியா மாநில மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரது தண்டனைக்கு எதிரான மனுவை நிராகரித்ததுடன், அவருக்கு பிணை வழங்குவதற்கான வாய்ப்பையும் நீக்கி, பிணை இல்லாத ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், தனது குற்றத்தீர்ப்பை இரத்துச் செய்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி எரின் பட்டர்சன் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
விசாரணையின்போது சில சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதம் மற்றும் நடுவர் குழுவினரின் தங்குமிட ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் நீதியான விசாரணையைப் பாதித்ததாக அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.




