17 ஆண்டுகளில் 1,765 யானைகள் பலி: இந்தியாவில் அதிர்ச்சியூட்டும் தகவல்
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளில் இயற்கைக்கு மாறான காரணங்களால் 1,765 யானைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2009 முதல் 2026 வரையான காலப்பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மாத்திரம் 1,185 யானைகள் உயிரிழந்துள்ளன. இது மொத்த உயிரிழப்புகளில் 67 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
மேலும், ரயில்களில் மோதுண்டு 277 யானைகளும், வேட்டையாடப்பட்டு 222 யானைகளும், விஷம் கொடுக்கப்பட்டு 81 யானைகளும் உயிரிழந்துள்ளன.
மாநில ரீதியாக அதிகளவான யானை உயிரிழப்புகள் ஒடிசா மாநிலத்தில் பதிவாகியுள்ளன. அங்கு 371 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், அசாமில் 356 யானைகளும் கர்நாடகாவில் 223 யானைகளும் உயிரிழந்துள்ளன.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கையில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. அங்கு 238 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், கர்நாடகாவில் 195 யானைகளும் அசாமில் 191 யானைகளும் உயிரிழந்துள்ளன.
அதேவேளை, ரயில்களில் மோதுண்டு யானைகள் உயிரிழந்த சம்பவங்கள் அதிகமாக அசாமில் பதிவாகியுள்ளன. அங்கு 90 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேற்கு வங்கத்தில் 68 யானைகளும் ஒடிசாவில் 45 யானைகளும் உயிரிழந்துள்ளன.
யானைகள் வாழும் வழித்தடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலிகள், தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற மின்சார இணைப்புகளே இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் அமித் குப்தா தெரிவித்துள்ளார்.
இவை வெறும் விபத்துகள் அல்ல; அலட்சியத்தின் விளைவுகள் எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
யானை – மனித மோதல்களைக் குறைப்பதற்காக ஆபத்தான ரயில் பாதைகளை அடையாளம் காணுதல், யானைகளின் வழித்தடங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் நீண்டகால ஆய்வுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




