22 ஆவது திருத்தச்சட்டமூலம் எங்கள் ஆட்சியில் ரத்து:எதிர்க்கட்சி தலைவர்
ஜனநாயகத்திற்கு விரோதமான – அரசியலமைப்புக்கு எதிரான 22 ஆவது திருத்தத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதனை நீக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (24) காலை பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
” 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் முழு நாட்டையும் தனிக் கட்சியின் அதாவது பெலவத்தை ஆட்சிக்கு உட்படுத்த இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சியை மக்கள் பலத்தினாலும் மக்கள் சக்தியினாலும் தோற்கடிக்க வேண்டும்.
அவ்வாறே, ஜனநாயகத்தை நாசம் செய்யும் அநுர குமார திஸாநாநாயக்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் சுபீட்சத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைய முடியுமான சகல ஜனநாயக மற்றும் தூய்மையான சக்திகளுடனும் நாம் ஒன்றிணைவோம்.
ஐக்கிய மக்கள் சக்தியானது இந்நாட்டு மக்களுக்கு உள்ள ஒரே மாற்று வழியும் மாற்று அரசாங்கமுமாக காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை பலப்படுத்தி, மக்கள் பலத்தினாலும், மக்கள் சக்தியினாலும் அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை தோற்கடிப்போம்.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.




