தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்தக் கூடாது: 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வலியுறுத்து
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பிற அரசியலமைப்பு அமைப்புகளை பலவீனமாக்குவது கண்டிக்கத்தக்கது. மேலும் அவற்றின் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் பிரச்சாரம் தீவிர கவலையளிப்பதாக உள்ளது.
அரசியலமைப்பு அமைப்புகளைத் தொடர்ந்து திருடர்கள், சமரசம் செய்யப்பட்டவர்கள் என்று முத்திரை குத்துவது, ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
அமைப்புகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை; ஆனால், அவற்றை இழிவுபடுத்துவது ஜனநாயக உரிமை அல்ல” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான நீதிபதி ஹேமந்த் குப்தா, நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோரும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.




