கொங்கோவில் அதிவேகமாகப் பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 1,000-ஐக் கடந்து தீவிர ஆபத்து
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மிக வேக பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை வரலாற்றில் பதிவான எபோலா பரவல்களிலேயே இதுவே மிக வேகமாகப் பரவும் நோய்த்தொற்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கானாவில் நடைபெற்ற சுகாதார மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Africa CDC) இயக்குநர் ஜெனரல் ஜீன் கசேயா (Jean Kaseya), மே மாதம் ‘புண்டிக்புக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் கண்டறியப்பட்டது முதல் இதுவரை 1,031 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் தடுப்பூசிகளோ, மருந்துகளோ அல்லது தேவையான நிதியுதவியோ இல்லாத காரணத்தினாலேயே இவர்கள் உயிரிழக்கின்றனர்” என்று ஜீன் கசேயா கவலையுடன் சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கொங்கோவின் அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொங்கோவின் வடகிழக்கு மாகாணமான இத்துரியில் (Ituri) பதிவான பல மரணங்களைத் தொடர்ந்து, கடந்த மே 15-ஆம் தேதி இந்த எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை வரையிலான தரவுகளின்படி, 2,473 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்தது 737 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு முன்னர் வரலாற்றுப் பதிவான எந்தவொரு எபோலா பரவலை விடவும் தற்போது கொங்கோவில் பலி எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2013-2016 காலப்பகுதியில் கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட வரலாற்றுப் பெரிய எபோலா பரவலின் போது 1,000 உயிரிழப்புகளை எட்ட 8 மாதங்கள் வரை தேவைப்பட்டது. ஆனால், தற்போதைய பரவல் 10 வாரங்களுக்கும் குறைவான காலத்திலேயே 1,000 பலிகளைக் கடந்துள்ளது.




