இந்திய படையினரின் வாட்ஸ்அப் குழுக்களில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவல்
இந்திய இராணுவம், துணை இராணுவப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய 13க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸ்அப் குழுக்களுக்குள் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட உளவுத்துறையினர் ஊடுருவியுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் குறித்த வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்ட சமூகத் தொடர்பாடல் தளங்களில் விரிவான பாதுகாப்புத் தணிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
பாதுகாப்பு அமைப்புகளின் எச்சரிக்கையின்படி, போலியான அல்லது ஏற்கனவே ஊடுருவப்பட்ட இந்தியத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி இந்த உளவாளிகள் குழுக்களில் இணைந்துள்ளனர். குழுக்களில் அமைதியான உறுப்பினர்களாக இருந்து, பகிரப்படும் உரையாடல்கள் மற்றும் ஆவணங்களைக் கண்காணித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊடுருவல் தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) விஞ்ஞானி எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பெண் உளவாளி ஒருவர் தொடர்பான சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
‘சோனியா’ என்ற பெயரில் குறித்த பெண், பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளார். பின்னர், அக்குழுவிலிருந்த ஊழியர் ஒருவருடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி, பணத்துக்குப் பதிலாக இரகசிய பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட குழுக்களில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் குழுக்களின் நிர்வாகிகள் உறுப்பினர் பட்டியல்களை முழுமையாக ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத உறுப்பினர்களை நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமான அல்லது இரகசியமான பாதுகாப்புத் தகவல்களை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் பகிர வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்த ஊடுருவலின் பின்னணியில் உள்ள நபர்கள், அவர்களுடன் தொடர்பு கொண்ட ஊழியர்கள் மற்றும் கசிந்திருக்கக்கூடிய தகவல்களின் தன்மை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன




