போராட்டக்காரர்கள் எச்சரிக்கை: டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்சியினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 20-ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் பொலிஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி வாகனங்களைச் சேதப்படுத்தியதால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.
இது குறித்து சிஜேபி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா செய்தியாளர்களிடம் கூறுகையில்:
“கடந்த 20-ஆம் திகதி நடந்த போராட்டம் ஒரு முன்னோட்டம் (Trailer) மட்டுமே. மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், லட்சக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி அடுத்தகட்ட போராட்டத்தைப் பெரியளவில் முன்னெடுப்போம்” என எச்சரித்தார்.
அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே வெளியிட்ட அறிக்கையில், “நீட் விவகாரம் தொடர்பாகவும், 25 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் சமூக சேவகர் சோனம் வாங்சுக் விவகாரத்திலும் பிரதமர் மோடி மௌனம் கலைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் பாதுகாப்பு பலடங்கு அதிகரிப்பு
போராட்டக்காரர்களின் தீவிர எச்சரிக்கையைத் தொடர்ந்து, கொல்கத்தாவிலிருந்து CRPF அமைப்பைச் சேர்ந்த 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் விமானங்கள் மூலம் டெல்லி வரவழைக்கப்பட்டு, ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோவின் 16 நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், மத்திய டெல்லிப் பகுதிகளில் நேற்றிரவு இணைய சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாடாளுமன்றச் சாலை பகுதியில் மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
போராட்டத்தின் போது பொலிஸார் மீது ‘பெப்பர் ஸ்ப்ரே’ (Pepper Spray) அடித்ததாகப் பிரபல யூடியூபர் டாக்டர் பார்த் கோயல் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்து அவரை அழைத்துச் சென்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




