அர்னாப் புயல் வலுப்பெற்றது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய “அர்னாப்” (Arnab) சூறாவளி இன்று (27) அதிகாலை மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிர புயலாக’ மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தீவிர புயலானது வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் மையக்கொண்டிருந்ததாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது இன்று பி.ப. 05.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்தியக் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொகுதியின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், இத்தொகுதியை நோக்கி ஈர்க்கப்படும் காற்றுப் ஓட்டம் நாட்டின் ஊடாகக் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வட, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




