சர்ச்சையைக் கிளப்பிய அமெரிக்க உரை: ராகுல்காந்திமீது பாஜக பாய்ச்சல்
இந்தியாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி முறைமை தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிப்பதாகவும், நாட்டில் பரவலான வேலைவாய்ப்பின்மை நிலவுவதாகவும், கல்வி முறைமையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜகவின் தேசியப் பேச்சாளர் கௌரவ் பாட்டியா, வெளிநாட்டில் வைத்து இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தியின் கருத்துகள் ஆதாரமற்றவை என்றும், அவை இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தியை ‘இந்தியாவின் மிர் ஜாபர்’ எனவும் அவர் விமர்சித்தார்.
பாஜகவின் மற்றொரு தேசியப் பேச்சாளரான பிரதீப் பண்டாரியும், ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, பாஜக தேசியப் பேச்சாளர் சி.ஆர். கேசவன், ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவதாக விமர்சித்தார்.
தெலங்கானா மாநில பாஜக தலைவர் என். ராமச்சந்தர் ராவும் ராகுல் காந்தியின் கருத்துகளைக் கண்டித்துள்ளார். இந்தியாவின் கல்வி முறைமை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் ஏன் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு வருகை தருகின்றனர் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை வீதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் சராவோகியும் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக ராகுல் காந்தி இந்தியாவையே எதிர்க்கத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் சர்வதேச செல்வாக்கு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
ராகுல் காந்தியின் கருத்துகளைத் தொடர்ந்து ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன.




