ட்ரம்பின் சீன விஜயத்திற்கு முன்னதாக ஷி ஜின்பிங் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதுடன், முதலீடுகளுக்கான தடைகளையும் நீக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் தென்பகுதி தொழில்நுட்ப மையமான ஷென்சென் நகரில் இன்று (18) ஆரம்பமான ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டின் ஆரம்ப உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக அமைப்பை (WTO) மையமாகக் கொண்ட, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தகக் கட்டமைப்பை உறுதியாகப் பேண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுதந்திரமான வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு ஆதரவளிப்பதுடன், உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் ஸ்திரத்தன்மையையும் சீரான செயல்பாட்டையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், என்விடியா (Nvidia) உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகளைப் பெற்றுக்கொள்வதற்கு சீனாவுக்கு அமெரிக்கா மேலதிக கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவி வரும் வர்த்தக இணக்கப்பாட்டை மேலும் சிக்கலாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பதிலடி வழங்கப்படும் என சீனாவும் அறிவித்துள்ளது.
சீனாவின் உற்பத்தித் துறைக்கு ஆதரவளிக்கும் கொள்கைகள் காரணமாக, அந்நாடு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வர்த்தக உபரியைப் பெறுவதாக மேற்கத்திய வர்த்தகப் பங்காளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும், உலகின் செல்வந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சியில் இன்னும் முன்னேறி வரும் நாடாக சீனா இருப்பதால், அதன் வளர்ச்சி மாதிரி பொருத்தமானது என பீஜிங் தரப்பு வாதிடுகிறது.
அதேவேளை, சீனாவின் விநியோகச் சங்கிலி ஆதிக்கம் அந்நாட்டுக்கு புவிசார் அரசியல் செல்வாக்கை வழங்குவதாகவும், அதன் கொள்கைகள் தமது தொழில்துறைகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டுக்கு முன்னதாக இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கனவே சீனாவைச் சென்றடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இன்று சீனாவைச் சென்றடையவுள்ளார்.
இதன்போது, நாளை (19) மூன்று தலைவர்களும் பங்கேற்கும் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. ஈரான் மற்றும் உக்ரைன் போர்கள், சர்வதேச வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் அணுவாயுதங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.




