பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறை: இஸ்ரேலிய அமைப்புகள் மீது ஆஸ்திரேலியா தடை
மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் மூன்று தனிநபர்கள் மற்றும் நான்கு அமைப்புகள் மீது ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
இந்தத் தடைகளின் கீழ், குறித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆஸ்திரேலியப் பிரஜைகள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், அவர்களுக்கு நிதி அல்லது ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டவர்களில், இஸ்ரேலிய குடியேற்ற இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான டேனியலா வெய்ஸ் (Daniella Weiss) மற்றும் நகலா (Nachala) அமைப்பின் தலைவரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கான கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிறுவனங்களும் இந்தத் தடைகளுக்கு இலக்காகியுள்ளன.
புதிய குடியேற்றங்களைத் திட்டமிடுதல், அவற்றை ஒருங்கிணைத்தல், நிதி திரட்டுதல், தன்னார்வலர்களை இணைத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபடும் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற நடவடிக்கைகளில் குறித்த தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் வன்முறைகள் மற்றும் குடியேற்ற விரிவாக்கம் ஆகியவை இரு நாடுகள் தீர்வுக்கான வாய்ப்புகளைப் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




