சீனாவின் அணு ஆயுத குவிப்பு – ஸ்டார்மரின் பயணத்தில் முக்கிய விவகாரம் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் தைவான் விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அத்துடன் வேகமாக அதிகரித்து வரும் சீனாவின் அணு ஆயுதக் குவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த, பிரதமர் தவறியுள்ளதாக the Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா உலகளவில் மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சீனாவுக்கு சுமார் 600 போர்முனைகள் உள்ள நிலையில் ஆண்டுக்கு சுமார் 100 புதிய போர்முனைகள் உருவாக்கப்படுகிறது.
உலகளாவிய ஆயுதங்களின் பெரும்பான்மையை அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகமாக வைத்திருக்கும் நிலையில் சீனா விரைவில் அதே அளவிற்கு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தைவானுக்கும், பசுபிக் பகுதியில் அமெரிக்க படைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
பெரிய அணு ஆயுத நாடுகள் முதலில் ஆயுதக் குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகின்ற போதிலும் தனது ஆயுத வளர்ச்சியை தெளிவாக விளக்காமல், பல்தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவே உலக அமைதிக்கு அடுத்த ஆண்டு முக்கிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஸ்டாமரின் அண்மைய சீன விஜயத்தின்போது வளர்ந்து வரக்கூடிய இந்த சவால் தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் அரசியல் அவதானிகள் கவனம் செலுத்தியிருந்தனர்.
உண்மையில் ஸ்டாமரின் குறித்த விஜயமானது பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக அமெரிக்கா ஏதாவது ஒன்றை அடைவது என்றாலோ அல்லது நாடுகளை அச்சுறுத்துவது என்றாலோ வரி விதிப்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச நாடுகள் பல முன்பு விரோத போக்கை கொண்டிருந்த நாடுகளுடன் கைக்கோர்க்க தொடங்கியுள்ளன.
அந்தவையில் பிரித்தானியாவிற்கும் – சீனாவிற்கும் இடையில் பொருளாதார உறவுகளை வளர்க்கும் நோக்கத்துடனேயே இந்த விஜயத்தை ஸ்டாமர் முன்னெடுத்திருந்தார்.
பிரித்தானியாவிற்கு முன்னதாக கனடாவும் இதனை அடிப்படையாகக் கொண்டு சீனாவுடன் கைக்கோர்த்திருந்தது. ஆகவே அணுவாயுதம் பற்றிய விவாதத்தை விட பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதிலும், அதற்கான சந்தைகளை அணுகுவதிலும் ஐரோப்பிய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. பிரித்தானியாவின் தற்போதைய தேவையும் இதுதான்.





