பிரபாகரன் வாழ்ந்த இல்லக் காணியிலிருந்த பெயர்ப் பதாகை கிழிப்பு
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த காணியில் பதிக்கப்பட்டிருந்த பெயர்ப் பதாகை இரவோடு இரவாக விஷமிகளால் கிழித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடல் நேற்று திங்கட்கிழமை மாலை தகனம் செய்யப்பட்ட நிலையிலேயே விஷமிகள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
வல்வெட்டித்துறை – ஆலடி வீதியில் அமைந்துள்ள, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த வீடு இராணுவத்தால் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அந்தக் காணி முகப்பில் எஞ்சியிருக்கும் மதிலில் அவரது பழைய வீட்டுப் படத்துடன் கூடிய பெயர்ப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் பதாகை நேற்று திங்கட்கிழமை இரவோடு இரவாக விஷமிகளால் கிழித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடல் நேற்று மாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை – ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளான நவம்பர் 26ஆம் திகதியன்று, அவர் வாழ்ந்த வீட்டுக்காணியில் எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், சிவாஜிலிங்கம் தலைமையில் வருடா வருடம் கேக் வெட்டிப் பிறந்தநாள் நிகழ்வு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
இம்முறை தலைவரின் 72 ஆவது பிறந்தநாள் நெருங்கிவரும் நிலையில், சிவாஜிலிங்கமும் இல்லாத இடைவெளியில் தமிழ் மக்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்தச் செயல் அரச தரப்பினரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்று மாலை தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணிக்குச் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




