ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்கு அருகே வெடிப்புச் சம்பவம் – 6 மாணவர்கள் பலி, 97 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குனார் மாகாணத்தில் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 97 பேர் காயமடைந்துள்ளனர்.
குனார் மாகாணத்தின் அண்டார் செர் பகுதியில் அமைந்துள்ள இடைநிலைப் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை (28) காலை சுமார் 10 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீடு சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிலருக்குச் சொந்தமானது எனவும், அங்கு வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குனார் மாகாண தகவல் மற்றும் கலாசாரப் பணிப்பாளர் மவ்லவி சாமி-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆரம்பகட்ட மதிப்பீடாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக குனார் மாகாண வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் மாறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் விசாரணைக் குழுவினர் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். வெடிப்புக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாடசாலை வளாகமொன்றில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




