எல் நினோவின் கோரத்தாண்டவம்: பெரு, ஈக்வடோர் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின – 34 பேர் பலி
எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக, தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோரின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் ஈக்வடோரில் 34 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய இடர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது.
பெருவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பியூரா நகரில் வியாழக்கிழமை ஆரம்பமான சுமார் 12 மணிநேரத் தொடர் மழையால் வீதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கின. இதனால் அப்பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
வெள்ளப்பெருக்கினால் பியூரா நகரிலுள்ள ஜோஸ் கயெட்டானோ ஹெரேடியா மருத்துவமனையின் சுவாச நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனையின் கேட்போர் கூடத்துக்கு மாற்றப்பட்டதுடன், ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.
நகரின் முக்கிய சதுக்கம், வர்த்தக நிலையங்கள் மற்றும் பல அரச கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பெருவின் இராணுவத்தினர் நீர் இறைக்கும் இயந்திரங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஈக்வடோரின் மேற்கு கடற்கரை நகரமான மந்தாவில் இரண்டு ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு மக்கள் மார்பளவு நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், சிலர் மெத்தைகளில் மிதந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
எல் நினோ தாக்கத்தால் மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் பெருங்கடல் பகுதிகளின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதுடன், உலகளாவிய காற்று மற்றும் மழை முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டுக்கான எல் நினோ நிகழ்வு இதுவரை பதிவானவற்றில் மிகவும் வலுவானதாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை தொடரக்கூடும் என பெருவின் தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




