ஹன்டா வைரஸ் பரவல் – பிரிட்டிஷ் நபருக்கு உதவ பாராசூட் மூலம் இறங்கிய மருத்துவக் குழு
ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று சந்தேகிக்கப்படும் ஒரு பிரித்தானியர் ஒருவருக்கு உதவுவதற்காக, பிரித்தானிய இராணுவ மருத்துவக் குழு தொலைதூர அட்லாண்டிக் தீவான டிரிஸ்டன் டா குன்ஹா (Tristan da Cunha)வில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கொடிய வைரஸ் பரவல் ஏற்பட்ட எம்வி ஹோண்டியஸ் (MV Hondius) சொகுசுக் கப்பலிலிருந்து வெளியேறிய அந்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவலில் இதுவரை ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் இருவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தீவில் ஆக்ஸிஜன் கையிருப்பு குறைந்த நிலையில் இருந்ததால், ஆர்ஏஎஃப் ஏ400எம் (RAF A400M) விமானம் மூலம் அவசர ஆக்ஸிஜன் வழங்கப்பட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹன்டா வைரஸ் பொதுவாக கொறித்துண்ணிகள் மூலம் பரவக்கூடியது. ஆனால், இந்தச் சம்பவத்தில் கண்டறியப்பட்ட ஆண்டிஸ் (Andes) வகை வைரஸ் மனிதர்களிடையிலும் பரவக்கூடியதாகக் கூறப்படுகிறது.
மேலும், வைரஸ் பரவல் ஏற்பட்ட ஹோண்டியஸ் (Hondius) கப்பல் தற்போது டெனெரிஃபே (Tenerife) தீவை வந்தடைந்துள்ள நிலையில், அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.




