ஜனநாயகத்துக்கு ஆபத்து: பதறுகிறது மஹிந்த அணி
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கான இறுதி யாத்திரையாகும். குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்குப் பேராபத்தாகவே அமையும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார கூறியவை வருமாறு:
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நாடாளுமன்றத்தில் பல்வேறு சட்டமூலங்களைக் கொண்டுவந்து, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து வருகின்றது.
குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ முன்வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானதொன்றாகும்.
இது ஜனநாயகத்தின் இறுதி யாத்திரையின் ஆரம்பமாகவே அமையும். ஊடகத் துறையில் உள்ளவர்கள் சுயாதீனமாகத் தமது கருத்துக்களைச் முன்வைக்க முடியாத சூழ்நிலை இதனால் ஏற்படக்கூடும்.
தொழிற்சங்கங்களின் பலத்த மூலமே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளும் முற்றாக முடக்கப்படலாம்” என்றார்.




