ஹட்டனில் ஒரே இரவில் நான்கு கடைகளில் கொள்ளை
ஹட்டன் நகரில் இன்று (25) அதிகாலை ஒரே இரவில் நான்கு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நகரின் சந்தி வீதியொன்றில் அமைந்துள்ள மூன்று நகைக்கடைகள் மற்றும் ஒரு சில்லறை வர்த்தக நிலையம் ஆகியவற்றிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடைகளுக்குள் புகுந்த சந்தேகநபர், அங்கிருந்த பொருட்களையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, நகைக்கடைகளின் பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறப்பதற்கு சமையல் எரிவாயு தீப்பற்றும் கருவியைப் பயன்படுத்தி சந்தேகநபர் முயற்சித்துள்ளார். எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, நகைக்கடைகளில் நகை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களையும், சில்லறை வர்த்தக நிலையத்திலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் பல்வேறு உணவுப் பொருட்களையும் சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கடைகளின் உரிமையாளர்கள் ஹட்டன் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி கிருஷ்ணன் மற்றும் ஹட்டன்–டிக்கோயா மாநகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





