பிரான்ஸில் மீண்டும் வெடித்த போராட்டம்: 1,000 பேர் கைது
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பாடசாலைகளின் மோசமான நிலைமைகளைக் கண்டித்து, சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்ற போதிலும், பின்னர் பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர்த்தாரைகளையும் பயன்படுத்தினர். மார்செய் நகரில் வீதித் தடுப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், போர்டோ நகரில் கடையொன்றின் பலகைகளைப் பிடுங்கிய போராட்டக்காரர்கள் வீதித் தடைகளை அமைக்க முயன்றனர்.
எனினும், கடந்த வார இறுதியில் இடம்பெற்றதைப் போன்ற பாரிய வன்முறைகள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் தீவைப்புகளைத் தவிர்ப்பதில் அதிகாரிகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளனர்.
பிரான்ஸ் உள்துறை அமைச்சின் மதிப்பீட்டின்படி, சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 4 இலட்சத்து 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். எனினும், தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கை சுமார் 8 இலட்சம் எனத் தெரிவித்துள்ளன.
போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சுமார் 70,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன், பல நகரங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் போராட்டங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என இந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். கடந்த சில நாட்களாக நடைபெற்ற விரைவான நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து, வன்முறை, தீவைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல நகரங்களில் மோதல்கள்
பாரிஸில், போர்ட் டி இத்தாலி பகுதியிலிருந்து போர்ட் டி வின்சென்ஸ் பகுதி வரை நடைபெற்ற அமைதிப் பேரணியின் முடிவில் மோதல்கள் வெடித்தன. முகமூடி அணிந்த சில இளைஞர்கள் வாகன விற்பனையகம் ஒன்றின் கண்ணாடிகளை உடைத்ததுடன், பொலிஸார் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
போராட்டத்தின் பின்னணியில், சுமார் 500 பேர் கலவரத்தில் ஈடுபடக்கூடியவர்களாக அடையாளம் காணப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரான் நுனெஸ் தெரிவித்தார்.
மார்செய் நகரில் குப்பைத் தொட்டிகள்
தீக்கிரையாக்கப்பட்டதுடன், வீதிகளை மறிப்பதற்காக உலோகத் தகடுகளும் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான லியோனில், தடைசெய்யப்பட்ட பகுதியில் கூடியிருந்தவர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
“மக்கள் பெரும் விரக்தியில் உள்ளனர்”
பாரிஸில் போராட்டத்தில் பங்கேற்ற செலி என்ற பெண், மக்ரோன் ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
“எங்களது குரல்கள் அடக்கப்படுகின்றன. எங்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது; அதிக வரி விதிக்கப்படுகிறது. ஆனால், எங்களால் எதையும் கூற முடியவில்லை. நீண்டகாலமாகப் பொறுத்திருந்துவிட்டோம். இனியும் பொறுத்திருக்க முடியாது என்பதால்தான் வீதிகளில் இறங்கியுள்ளோம்” என அவர் கூறினார்.
கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தவறானவை என்றாலும், வறுமையும் பொலிஸாரின் வன்முறையுமே இத்தகைய நிலைமைக்குக் காரணம் என இளம் போராட்டக்காரர்கள் சிலர் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகளுக்குப் பதில் கிடைத்து, நாட்டில் மாற்றம் ஏற்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.




