உலக அமைதிக்குப் புதிய அத்தியாயம்: ஒரே மேடையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் தெற்கு சீனாவின் ஷென்சென் நகரில் அமைந்துள்ள அரச விருந்தினர் மாளிகையான கிலின் வில்லாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் அணு ஆயுதக் குறைப்பு, ஈரான் மற்றும் உக்ரைனில் இடம்பெறும் போர்கள், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாடுகளும் அமைதியான சகவாழ்வை முன்னெடுக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு வரலாற்றில் முதல் முறையாக இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், இது “முன்னோடியில்லாத முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த முத்தரப்பு சந்திப்பு உண்மையில் வரலாற்றை உருவாக்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் ஆக்கபூர்வமான உரையாடலைப் பேணுவதில் மூன்று நாடுகளுக்கும் விசேட பொறுப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
“ஈடுபாட்டுக்கான வாய்ப்புகளை நிராகரிப்பதன் மூலம் எந்தவொரு அமைதியும் ஒருபோதும் உருவாக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அமைதியைப் பாதுகாப்பதில் மூன்று நாடுகளுக்கும் பொறுப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புடன் செயற்பட்டால் உலகளாவிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.




