“ஈரானுடனான ஒப்பந்தம் இஸ்ரேலை மேலும் பாதுகாப்பானதாக்கும்” – ஜே.டி. வான்ஸ் அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தத்தில், வரும் நாட்களில் இஸ்ரேல் சேர்க்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த மூலோபாய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலுக்கு இருந்த ஆரம்பகட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விகளுக்கு வான்ஸ், நெருங்கிய நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது என்று கூறியுள்ளார்.
“இந்த ஒப்பந்தம் இஸ்ரேலையும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பேச்சுவார்த்தைகள் முன்னேறிச் செல்லும்போது, இந்த அமைதி ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் ஒரு அங்கமாக இருக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று வான்ஸ் கூறினார்.
ஈரான் ஒரு இயல்பான நாட்டைப் போல நடந்துகொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக வான்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஈரான் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை முழுமையாகக் கைவிடுவது, பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவது, மற்றும் நாட்டில் வெளிநாட்டு முதலீட்டிற்குச் சாதகமான சூழலை உருவாக்குவது ஆகியவையே முக்கிய நிபந்தனைகளாகும்.
இவை நிறைவேற்றப்பட்டால், ஈரான் இந்த ஒப்பந்தத்தின் பலன்களைப் பெறத் தொடங்கும்.
சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ், ஈரானிடம் தற்போது உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அழிப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் , ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்ற நீண்டகால உத்தரவாதத்தின் அடிப்படையில் மட்டுமே அமெரிக்கா அதன் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்பதையும் வான்ஸ் தெளிவுபடுத்தினார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துடன், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய ஒப்பந்தத்தை ஒப்பிட முடியாது என்று வான்ஸ் கூறினார்.
புதிய ஒப்பந்தம் முந்தையதை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கவில்லை என்ற ஒபாமாவின் கூற்றுகளை வான்ஸ் முற்றிலுமாக நிராகரித்தார்.
“ஒபாமா கால ஒப்பந்தம் ஈரானின் அணுசக்தி திட்டத்தை வேகப்படுத்தியது. அப்போது, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை நிறுத்துவதற்காக பெரும் தொகையை வழங்கியது. ஆனால் இன்றைய நிலைமை வேறு.
ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. அது மீண்டும் ஒருபோதும் கட்டமைக்கப்படாது என்ற நீண்டகால உறுதிமொழியை நாங்கள் கோருகிறோம்,” என்று வான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒபாமாவின் கீழ் இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் உருவான இந்த ஒப்பந்தம், பிராந்தியத்தில் ஈரானின் ஆக்கிரமிப்பைத் தூண்டிவிடும் என்று அஞ்சி, வளைகுடா நாடுகள் அதனை கடுமையாக எதிர்த்தன.
இருப்பினும், ட்ரம்பின் புதிய திட்டம் மத்திய கிழக்கை அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்லும் என்று கூறி, வளைகுடா நாடுகள் அதனை ஒருமனதாக வரவேற்றுள்ளதாக வான்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.




