F-35 போர் விமானக் கொள்வனவு – நிதியை அதிகரிக்க இத்தாலி அரசாங்கம் கோரிக்கை
இத்தாலிய அரசாங்கம், F-35 போர் விமானங்களுக்கான முதலீட்டை 7.28 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரியுள்ளது.
இந்த அதிகரிப்பானது ஒட்டுமொத்த செலவை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009-ல் 13.5 பில்லியன் யூரோக்கள் பட்ஜெட்டுடன் அங்கீகரிக்கப்பட்ட இந்த திட்டமானது, கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், 20.8 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது.
இந்த புதிய முதலீடு அடுத்த ஆண்டு தொடங்கி, 2039-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப மேம்பாடுகள், கடுமையான பாதுகாப்புத் தேவைகள், பணவீக்கம் மற்றும் யூரோ-டாலர் மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாகவே இந்தச் செலவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் பரந்த அளவிலான பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்புச் செலவுகளை அதிகரித்து வரும் சூழலில் இந்த முதலீட்டு உயர்வு மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்படத்தக்கது.




