டெல்லி கலவர சம்பவம் குறித்து கைதான இமாமுக்கு இடைக்கால பிணை
2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான பெரும் சதித்திட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர் ஷர்ஜில் இமாமுக்கு (Sharjeel Imam) 7 நாட்கள் இடைக்கால பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.
தனது மைத்துனரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக இடைக்கால பிணை கோரி ஷர்ஜில் இமாம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சமீர் பஜ்பாய், அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரையிலான 7 நாட்களுக்கு அவருக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டங்களின் போது, 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்ததுடன் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் தொடர்பாக உமர் காலித், ஷர்ஜில் இமாம் உள்ளிட்ட பலர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான ‘உபா’ (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில் தொடர்ச்சியாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனக் கூறி அவர்கள் தாக்கல் செய்திருந்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், குடும்பத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஷர்ஜில் இமாமுக்கு இந்த 7 நாட்கள் இடைக்கால பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது.





