இலங்கைக் கடற்பரப்பில் தவித்த 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குறித்த படகு, இயந்திரக் கோளாறு காரணமாக நெடுந்தீவு குயின் ரவஸ் பகுதிக்கு அருகில் உள்ள கலப் பகுதிக்குள் அகப்பட்டுள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் உதவி கோரியுள்ளனர்.
எனினும், கடல் வற்றுப்புக் காணப்பட்டதனால் கடற்படையினரின் படகுகளோ அல்லது ஏனைய மீன்பிடிப் படகுகளோ குறித்த பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடற்படையினர் அந்தப் படகுக்குச் சென்று, அங்கிருந்த மீனவர்களைக் கடலில் இறக்கி பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 11 இந்திய மீனவர்களும் தற்போது கடற்படையினரின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
பொலிஸாரால் அவர்கள் நாளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




