மோடி, அமித் ஷாவால் ஸ்டாலினை பணியவைக்க முடியாது
தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
திருச்சியில் கருத்து தெரிவித்த அவர், “ டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.
திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் , “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அடிப்படையில் மிக வித்தியாசமான தேர்தல். பாஜக அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அகற்றிவிட்டு, ஒரு பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சிக்கிறது.
அதிமுக ஒரு சிறந்த கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிபோய் பாஜகவின் முகமூடியாக மாறி விட்டது.
தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது. தமிழ் என்பது ஒரு தொன்மையான மொழி மட்டுமல்ல. அது தமிழர்களின் ஆன்மா. தமிழ் மக்களின் வீரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால்தான் பாஜக, அதிமுகவின் ஆன்மாவை கையில் பிடித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும்.
மகளிர் மசோதாவை பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை கொண்டு வரப் பார்த்தனர். இதன்மூலம் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என நினைத்தனர்.
காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அதனை தோல்வி அடையச் செய்துள்ளோம் என்பது மிக பெருமையாக உள்ளது.
பாஜகவினர் மதங்களால், சாதிகளால், மொழியால் மக்களைப் பிரித்து இந்தியாயை துண்டாட பார்க்கிறார்கள். நாட்டின் ஸ்திரத்தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பாதை சமூக நீதி, சமத்துவ பாதை. அதை பாஜக விரும்பவில்லை. எனவே அதை சிதைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் உள்ளது. சமூக நீதி காப்பது குறித்து மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.





