சர்வதேச அணுசக்தி கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவருக்கு தடை
வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) கூட்டத்தில் ஈரான் அணுசக்தித் தலைவர் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஸ்நாப்பேக்’ (snapback) தடைகளில் விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதற்குத் தகுந்த எதிர்ப்பை தெஹ்ரான் திங்கள்கிழமை பதிவு செய்துள்ளது.
வியன்னாவில் திங்கள்கிழமை தொடங்கிய சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் வருடாந்திரப் பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி (Mohammad Eslami) கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார்.
இருப்பினும், தொடக்க நிகழ்வின் போது, எஸ்லாமிக்கு முதலில் வழங்கப்பட்ட விசா உரிமத்தை ஆஸ்திரியா ரத்து செய்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநாட்டில் கருத்து தெரிவித்த IAEA வுக்கான ஈரானியத் தூதர், “இந்த ரத்து மற்றும் அதற்கு முன்வைக்கப்படும் சட்டப்பூர்வ நியாயப்படுத்தல்கள் ஆகியவை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதையும், இந்த அமைப்பைத் தீவிரமாக அரசியலாக்குவதையும் தெளிவாகக் காட்டுகின்றன” என்று சாடினார்.
அமெரிக்கா ஆஸ்திரியாவிற்கு அழுத்தம் கொடுத்து இந்த முடிவை எடுக்க வைத்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகே (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.
அதேவேளை சர்வதேச பயணங்களுக்காக ஈரானிய அதிகாரிகள் விசா பெறுவதைத் தடுக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியே இதுவென ஈரானும் ரஷ்யாவும் குற்றம் சாட்டியுள்ளன.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் ‘ஸ்நாப்பேக்’ பொறிமுறையின் கீழ் மீண்டும் விதிக்கப்பட்ட தடைகளில் இருந்து எஸ்லாமிக்கு பயண விலக்கு அளிப்பதற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்ததாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.




