பாலியல் குற்றவாளிக்கு சான்றிதழ் :மெல்போர்ன் மேயர் ராஜினாமா
சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பிரீத் சிங் வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட உரையில்,
” 2024-ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற காஷ்யப் படேல் (Kashyap Patel) என்பவருக்கு நற்சான்றிதழ் வழங்கியது தவறு.
நம்மில் யாருமே அனைத்து முடிவுகளையும் சரியாக எடுப்பதில்லை. நாம் தவறு செய்யும்போது அதற்குப் பொறுப்பேற்பதும் தலைமையின் ஒரு அங்கமே ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள அந்த நற்சான்றிதழை நான் வழங்கியபோது, முழுமையான பின்னணி எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது போல் அந்த நபர் நடந்துகொள்ளவில்லை என்று நான் நம்பவைக்கப்பட்டேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மேயர் பதவியிலிருந்து விலகுமாறு பிரீத் சிங் பல மாதங்களாக கடும் அழுத்தங்களைச் சந்தித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் விண்டாம் மாநகரசபையால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நற்சான்றிதழ் வழங்கிய செய்தி வெளிவந்ததையடுத்து, அவர் ஏப்ரல் 1 அன்று தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து விலகினார். இருப்பினும், மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
அவரது ராஜினாமாவை வலியுறுத்தி வேரிபி (Werribee) பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். மேலும், விண்டாம் மாநகரசபையில் நல்லாட்சியை உறுதிப்படுத்தவும், தலைமைத்துவத்தை நிலைநிறுத்தவும் விக்டோரியா மாநில அரசு கண்காணிப்பாளர் ஒருவரையும் நியமித்தது.





