உலகம் செய்தி

இனப்படுகொலை தீர்ப்பு நியாயமற்றது: மியன்மார் கடும் சீற்றம்

ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மார் பாதுகாப்புப் படையினர் அரச ஆதரவுடன் இனப்படுகொலை மேற்கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது என மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மார் பாதுகாப்புப் படையினர் அரச ஆதரவுடன் இனப்படுகொலை மேற்கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது என மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு ஒருமித்த கருத்துடன் வழங்கப்படவில்லை என்றும், மியன்மார் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கப் பேச்சாளர் கெய்ங் கெய்ங் சோ (Khaing Khaing Soe) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக தலைநகர் நெய்பிடோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது நாடு அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு அனைத்து நீதிபதிகளினதும் ஒருமித்த முடிவு அல்ல. இது நியாயமான தீர்ப்பும் அல்ல” என்றார்.

மியன்மார் இராணுவம் ரோஹிங்கியா ஆண்கள் மற்றும் சிறுவர்களை பெருமளவில் கொலை செய்ததுடன், பெண்களுக்கு எதிராக பரவலான பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதாகவும், நூற்றுக்கணக்கான கிராமங்களை அழித்ததாகவும் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் நீண்டகாலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், தற்போது உள்நாட்டுப் போரினால் அதிகரித்த வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, அண்டை நாடான பங்களாதேஷில் சுமார் 12 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் நெரிசலான முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவர்களின் வாழ்வாதார நிலைமைகளும் மோசமடைந்து வருகின்றன.

ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களுக்காக மியன்மார் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மியன்மாரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்தவர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பை பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கானோர் கொண்டாடியுள்ளனர். எனினும், அவர்கள் எப்போது தாயகம் திரும்ப முடியும் என்பது தெளிவாகவில்லை.

நாடுகளுக்கிடையிலான சர்ச்சைகளைத் தீர்ப்பதுடன், சர்வதேச ஒப்பந்த மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இறுதியானவை என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும்.

மேலும், 191 பக்கங்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பில், 2017 செப்டம்பர் 7ஆம் திகதி இன் டின் (Inn Din) பகுதியில் 10 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான ரொய்ட்டர்ஸ் செய்தி விசாரணையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு 500 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறித்தும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி