03 முஸ்லிம் நாடுகளின் சேர்க்கையால் மத்தியக் கிழக்கின் போர் மேகம் களையுமா?
சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம், ஈரானைத் தடுக்கவும், நம்பகத்தன்மையற்ற அமெரிக்காவைச் சமன் செய்யவும், இஸ்ரேலுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் முயலும் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கு போர் நீடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி, அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளிகளான மூன்று சக்திவாய்ந்த இஸ்லாமிய நாடுகளை, ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலையும் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதும் நேட்டோ பாணியிலான ஒரு விதியுடன் பிணைக்கிறது.
பாகிஸ்தானும் துருக்கியும் மத்தியஸ்தர்களாகச் செயல்படும் நிலையில், இந்த மூவர் கூட்டணி போருக்குத் தீர்வு காண முயல்வதால், இந்த விதிமுறை அமல்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது, இது சாத்தியப்படுமா, இதனால் மத்தியக்கிழக்கில் அமைதி திரும்புமா என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்த மூன்று நாடுகள் இப்போது ஏன் ஒன்றிணைந்துள்ளன?
மத்திய கிழக்கு போர் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும், ஈரானுக்கு ஒரு முழுமையான அடியைக் கொடுப்பதில் அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில், தெஹ்ரான் ஹார்முஸ் ஜலசந்திக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் போக்குவரத்தைத் தொடர்ந்து முடக்கி வருகிறது, மேலும் அதன் ஹூதி கூட்டாளிகள் செங்கடலில் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கின்றனர்.
இந்த யதார்த்தம், பிராந்தியத்தின் பாதுகாப்பு கட்டமைப்பைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இது அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தில் வேரூன்றியிருந்த பல தசாப்த கால மரபுசார்ந்த நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்துகிறது.
பிராந்தியம் முழுவதும் அமெரிக்கத் தளங்கள் தீவுக்கூட்டம் போலப் பரவியிருந்தபோதிலும், ஈரானால் ஏவப்பட்ட அனைத்து ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறிப்பதில் அமெரிக்கப் படைகள் சிரமப்பட்டு வருகின்றன.
இந்த சூழலானது அமெரிக்காவின் தடுப்பு சக்தி கணிசமாக பலவீனமடைந்துள்ளதையும், ஈரானிய அச்சுறுத்தலை பிராந்திய சக்திகளால் பெருகிய முறையில் நிர்வகிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பதையும் காட்டுகிறது,” என்று சவூதி அரசாங்கத்திற்கு நெருக்கமான அரசியல் ஆய்வாளர் அலி ஷிஹாபி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து, சவூதி அரேபியா, முன்னர் சிக்கலான உறவுகளைக் கொண்டிருந்த துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நெருக்கமாகி வருகிறது. இந்த நான்கு நாடுகளும் மோதலில் மத்தியஸ்தத்தை ஆதரித்துள்ளன.
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையே பாதுகாப்பு ரீதியான உறவுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன, மேலும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாட்டிற்கும் இதில் என்ன நன்மை?
“இந்த மூன்று நாடுகளும் வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன,” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பாதுகாப்பு விரிவுரையாளரான ஆண்ட்ரியாஸ் கிரீக், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
“எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவிடம் செல்வம் உள்ளது, ஆனால் அதன் உள்நாட்டு இராணுவ-தொழில்துறை ஆழம் குறைவாகவே உள்ளது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், துருக்கியும் பாகிஸ்தானும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன, ஆனால் சக்திவாய்ந்த இராணுவங்களைக் கொண்டுள்ளன.
“துருக்கியிடம் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன் உள்ளது, ஆனால் அதற்கு சந்தைகளும் முதலீடும் தேவை. பாகிஸ்தானிடம் மனிதவளம், இராணுவ நிறுவன ஆழம் மற்றும் அணுசக்தி தடுப்பு சக்தி உள்ளது, ஆனால் அதற்கு நிதி மற்றும் தொழில்துறை வாய்ப்புகள் தேவை,” என்று அவர் கூறினார். ஆகவே இவை ஒன்றிணையும் போது மூன்று நாடுகளின் தேவைகளும் பூர்த்தியாகுகின்றன.
எவ்வாறாயினும் இந்த மூவராலும் அமெரிக்காவிற்கு மாற்றாக இருக்க முடியாது, ஏனெனில் அமெரிக்கா அவர்களின் பாதுகாப்பிற்கு மையமாக உள்ளது. ஆனால், வொஷிங்டன் “இஸ்ரேலைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஈரானின் பதிலடித் தாக்குதல்களிலிருந்து வளைகுடா உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவோ” போவதில்லை என்பதால், அவர்கள் ஒரு இடைவெளியை நிரப்ப விரும்புகிறார்கள்.
“ஒரே ஒரு அமெரிக்கக் குடையை விட, பல அடுக்கு பாதுகாப்பை” நாடுவதே சவுதி அரேபியாவின் நலனுக்கு உகந்தது என்று கிரீக் கூறினார், இந்த புதிய கூட்டணியின் மையத்தில் அந்த இராச்சியம் உள்ளது. இந்த வளங்கள் இணைந்தால், இந்தக் கூட்டணி, குறைந்தபட்சம் கோட்பாட்டளவில், ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
துருக்கியும் பாகிஸ்தானும் ஈரானைத் தாக்குமா?
சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும் நடத்தினால், இந்த மூவரும் ஈரானைத் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு.
2025-ல் சவூதி அரேபியாவுடன் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், பாகிஸ்தான் தனது அண்டை நாட்டைத் தாக்கவில்லை.
அதேபோல் “துருக்கியும் பாகிஸ்தானும் ஈரானுடன் போரிடாது. இந்த நாடுகள் தங்களை ‘நிலைத்தன்மையை ஏற்படுத்துபவர்களாக’ கருதுகின்றன, மேலும் அதை முன்னெடுத்துச் செல்ல ஒரு அரசியல் உத்வேகத்தை உருவாக்க விரும்புகின்றன,” என்று புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் அஸ்லி அய்டின்டாஸ்பாஸ் (Asli Aydintasbas) குறிப்பிடுகிறார்.
சவூதி அரேபியா மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாகிஸ்தானும் துருக்கியும் ஈரானைத் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், “இந்த ஒப்பந்தம் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு ஒரு அரசியல் குறியீட்டு சமிக்ஞையை அனுப்புகிறது”. என மற்றொரு ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் “இந்தக் கூட்டணி, ஈரானிய மேலாதிக்கத் திட்டத்தையும் இஸ்ரேலிய மேலாதிக்கத் திட்டத்தையும் சீர்குலைக்கும் ஒரு விருப்பத்தைக் காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




