போர் இல்லாத நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதற்கு?
1988, 1989 காலப்பகுதியிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்பட்டிருந்தால், ஜே.வி.பியினர் இன்று இருந்திருக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“நாட்டில் இன்று போர் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவருவதன் நோக்கம் என்ன?
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். 1988, 1989 காலப்பகுதியிலேயே மேற்படி சட்டமூலம் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டமூலங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.
அதேவேளை, அரசாங்கத்துக்குத் தேவையான விதத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு நாம் தயாரில்லை. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது” என்றார்.




